திருச்சிற்றம்பலம்
நால்வர் நல்கிய நல்வழி
பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி
ஆழிமிசை கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி
வாழிதிருநாவலூர் வன் தொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாத ஊரர் திருத்தாள் போற்றி
திருஞான சம்பந்தப் பெருமான் வேதநெறி தழைத்தோங்கவும், மிகு சைவத்துறை விளங்கவும்,பூதப்பரம்பரை பொலியவும் , தெய்வத்திருநீறு சிறக்கவும் வையம் மகிழ, யாம் வாழ,அமணர் வலி தொலைய,பிரமபுரத்தில் தோன்றி,மூன்றாம் அகவையில் ஞானப்பால் அருந்தி திருபெருகு சிவஞானம் பெற்று முத்துப்பந்தர்,முத்துச்சிவிகை,பொற்றாளம்,பொற்காசு,பெற்று அடியார் புடை சூழச் சென்று “தாயு நீயே தந்தை நீயே சங்கரனே” என்றும் “எந்தை ஈசன் எம்பெருமான்” என்று அழைத்தும் சத்புத்திர மார்க்கத்தில் வழிபட்டார்.
“நாளாய போகாமே “ எனத்துவங்கி “கோளாய நீக்கும் அவன் கோளிலி எம்பெருமான்” என்றும் ஒன்பான் கோள்களும் “நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே” என்றும் “ஆணை நமதே” என்று உறுதியாக அறுதியிட்டு உரைத்த தமிழ் மனிதகுலம் சைவத்தில் நிலைபெற்றுத் திகழ வழிகாட்டுகிறது.
சமணசமயத்தை சார்ந்த பாண்டிய மன்னனின் வெப்புநோய் நீங்க “மந்திரமாவது நீறு” என திருநீற்றுப்பதிகம் பாடி, மீண்டும் சைவத்தை நிலை நாட்ட அனல் வாதம், புனல் வாதம் செய்து வெற்றி பெற்று தகவிலா சமணர்களை அவர்களே ஒப்புக்கொண்டபடி கழுவேற்றி “வேந்தனும் ஓங்குக” என்று திருநீறு அளிக்க பாண்டியன் கூன் நிமிர்ந்து அமண் இருள் மாய, திருநீறு செழிக்கச் செய்த பெருமை ஞானசம்ப்ந்தப்பெருமானுக்கே சாரும்.
“காதலாகிக் கசிந்து “ எனத் துவங்கும் பஞ்சாக்கரப்பதிகம் பாடி பஞ்சாக்கரத்தின் பெருமை அனைவரும் உணரச்செய்தார். ஆக ஞானசம்பந்தர், சத்புத்திர மார்க்கத்தில் சென்று திருநீற்றின் பெருமையையும் பஞ்சாக்கர பெருமையையும் திருத்தலங்கள்தோறும் சென்று பதிகங்கள் பாடி நம்மை சிவபெருமானிடத்தில் அழைத் து செல்லும் நல் வழியைக் காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment